சுங்கைபீசியில் உடைப்படவிருந்த வீட்டுப் பிரச்சினை சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டது: டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர்:

சுங்கைபீசியில் உடைப்படவிருக்கும் வீட்டின் உரிமையாளருக்கு மேம்பாட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது.

இதன் மூலம் இப்பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணப்பட்டது என்று மஇகா பொருளாளர் டத்தோ ந. சிவக்குமார் கூறினார்.

சுங்கைபீசி ஜாலான் சான் சோவ் லின்னில் மோகன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது.

நான்கு தலைமுறையாக இந்த வீட்டில் அவர்கள் தங்கி வருகின்றனர்.

ஆரம்பக் காலத்தில் இங்கு குடியிருப்பு பகுதி இருந்தது. கால ஓட்டத்தில் அப்பகுதி மக்கள் வீடுகளை காலி செய்து விட்டனர்.

இந்தியர்களுக்கு சொந்தமான 5 வீடுகள் மட்டும் இன்னும் உள்ளது.

இதில் மோகனுக்கு சொந்தமான வீட்டை உடைக்க மேம்பாட்டு நிறுவனம் நீதிமன்ற உத்தரவுடன் காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வீட்டை உடைக்கும் நடவடிக்கையை மேம்பாட்டு நிறுவனத்தினர் மேற்கொண்டனர்.

மேம்பாட்டு நிறுவனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் வாயிலாக பாதிக்கப்பட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் வழங்க அந்நிறுவனம் முன்வந்துள்ளது.

அதே வேளையில் மின்சார கட்டண பாக்கியையும் அந்நிறுவனம் செலுத்துகிறது.

இதன் மூலம் அப்பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டது என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்